கழுகு - லொடுக்கு மற்றும் ஜூலை 23.
கழுகு தன்னுடைய அறையில் அமைதியாக அமர்ந்து எதையோ உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த போது லொடுக்கு உள்ளே சென்றான்.
"ஏய் கழுகு! வா வெளியே போய் இளநீர் குடித்துவிட்டு வரலாம்" சென்னை வெயில் இப்போது அவர்களை தேனீரிலிருந்து இளநீர் குடிப்பவர்களாக மாற்றியிருந்தது.
இருவரும் இளநீர் குடிப்பதற்காக வெளியே வந்தனர்.
இருவரையும் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றாலும் ஒரு சிறிய அறிமுகம். இருவரும் நிருபர்கள். கழுகு தொலைக்காட்சியில் வேலை செய்கிறார்கள். இருவருக்கும் எட்டு ஆண்டு நட்பு.
இப்போது இளநீர் கடைக்குச் செல்வோம்...
இளநீரை உறிஞ்சிக் கொண்டே லொடுக்கு கேட்டான், "டேய் ஏன்டா உம்முனு இருக்க? உன்னோட துறுதுறுப்பு எல்லாம் ஏனோ இன்னிக்கு காலையில இருந்தே காணாமல் போயிருக்கிறது?"
"ஒன்னும் இல்லேடா" கழுகுவின் குரலில் சுரத்து இல்லை.
"டேய் எனக்கு ஒன்ன எட்டு ஆண்டுகளாவே தெரியும். ஒன்னேட குரலே சொல்லுது ஏதோ இருக்குன்னு. சொல்லுடா. யாரு அந்தப் பொண்ணு?. எட்டரை மணிக்குக் குட்டப்பாவாடையோட உங்களுக்குப் பிடித்த பாடல்-ன்னு ஒரு நிகழ்ச்சியத் தொகுத்து வழங்குவாளே அந்த கேரளாக்குட்டியாடா" லொடுக்கு உண்மையிலேயே சீரியசாகக் கேட்டான்
"டேய் பேசாம இருடா" இது கழுகு.
"ஆ! கண்டுபிடிச்சுட்டேன். நீங்களும் தமிழ் பேசலாம்-ங்கிற நிகழ்ச்சிய அறைகுறை ஆங்கிலத்திலும் கடித்துக் குதறப்பட்ட தமிழிலும் தொகுத்து வழங்குவாளே அந்த குதிரைவாலு அவளாடா?"
லொடுக்கு கேட்டுக்கொண்டே போனான்.
"நாயே நாயே ஒன்னோட புத்தி போகுதா பாரு. இது அது இல்லடா வேற" கழுகு பதில் சொல்லியது.
லொடுக்கு இடைமறித்து, "இது ரெண்டும் இல்லாம வேறன்னா எல்லாமே ஆன்ட்டியாச்சே? அடக் கள்ளக் கழுகு எதுவும் ஆன்ட்டிக்கு பிட்டு போட்டிருக்கியாடா" என்றான்.
கடுப்பான கழுகு "டேய் நிறுத்துடா உள்ளே என்னோட கேபினுக்குப் போனதும் நானே சொல்றேன்."
மீதமிருந்த இளநீரையும் உறிஞ்சிக் குடித்து விட்டு இருவரும் அறைக்குப் போயினர்.
கழுகுவும் லொடுகுவும் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
கழுகுவின் மேசையில் சில நிழற்படங்கள் இருந்தன.
கழுகு அமைதியாக தன்னுடைய மேசையில் இருந்த ஒரு புகைப்படத்தையும் ஒரு செய்தித் தாளின் பக்கத்தையும் எடுத்துக் காட்டியது.
ஒரு புகைப்படத்தில் ஒரு பெண், கையில் ஒரு குழந்தையின் உடலை வைத்துக்கொண்டு தலைவிரிகோலமாய் அழுது கொண்டிருந்த படம்.
“அந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?“ கழுகு கேட்டது.
“ஏதோ சுனாமியில் இறந்து போன தன்னுடைய குழந்தையை கையில் வைத்து ஒரு தாய் அழுது கொண்டிருப்பது போல இருக்கிறது.” லொடுக்கு மென்மையான குரலில் பதிலளித்தான்.
“ஆனால் நம்முடைய தொழிலில் இது போன்ற புகைபடங்கள் அடிக்கடி பார்க்க வேண்டியது இருக்கும் இதற்கு ஏன் நீ வருந்துகிறாய்.”
“உலகில் மரணம் மிககொடியது. அதைவிடக் கொடியது கண் முன்னாலேயே ஒரு குழந்தை இறப்பதைப் பார்ப்பது. அது சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவினால் வந்தாலுமே ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் மனிதர்களே அதைச் செய்திருந்தால்?”
லொடுக்கு கேட்டான். "என்ன சொல்கிறாய்?"
கழுகு பதில் சொல்லியது. "இதைச் செய்தது காவல் துறை தான். 1998 ஜூலை 23-ம் நாள் காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கல்வீச்சில் நடந்த கொடுமை தான் இது."
லொடுக்கு கேட்டான், "என்ன சொன்னாய்? காவல் துறையின் கல் வீச்சு என்று...."
"ஆம் உண்மை தான். லத்தியை பயன்படுத்தும் காவல் துறையை பார்த்திருக்கிறோம்; கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் காவல் துறையைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே பொது மக்கள் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தி ஒரு புதிய சாதனையையே நிகழ்த்தி விட்டனர் காவல் துறையினர்"
“சரி குழந்தை எப்படி இறந்தது?” லொடுக்குவின் குரலில் பதட்டம் இருந்தது.
"1998 ஜூலை 23-ம் நாள் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பாகவும் இதற்கு முன் நடந்த தொழிலாளர் போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கக் கோரியும் நெல்லை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுக்க கிட்டத்தட்ட 2000 தொழிலாளர்களும் தலைவர்களும் ஊர்வலமாக நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வந்திருந்தனர். அவர்களுள் அப்போதைய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் இருந்தார்.”
"மேலே சொல்"
"அன்று ஊர்வலம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் நெல்லை மாநகரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஊர்வலத்தை தலைமை தாங்க ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வந்திருந்தனர்."
"யாரெல்லாம்?"
""அப்போதைய உறுப்பினர்கள் திரு. அப்பாவு M.L.A, திரு. ஜே.எம். ஹாரூன் M.L.A , திரு. வேல்துரை M.L.A திரு. ஈஸ்வரன் M.L.A, திரு. கிருஷ்ணசாமி M.L.A மற்றும் சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன்."
"அமைதியாக நடந்த ஊர்வலம் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தின் அருகில் நெருங்கியதும் வேறு விதமாய் ஆனது"
"என்ன ஆனது?"
"மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தினுள் சென்று மனுக் கொடுக்க தலைவர்களுக்கு அனுமதி உடனே கிடைக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் கோஷமிட ஆரம்பித்தனர். அப்போது தான் காவல் துறையினர் தொழிலாளர்களைக் கலைந்து போகச் சொல்வதற்காகத் தடியடி நடத்த ஆரம்பித்தனர். இதனால் தொழிலாளரகளும் காவல் துறையினர் மீது கற்களை வீச் ஆரம்பித்தனர்
"இவை நடந்ததெல்லாம் ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சற்று வெளியே தாமிரபரணி ஆற்றின் கரைக்கு மிக அருகில். காவல் துறையினர் வான் நோக்கி இரண்டு முறை சுட்டனர். மக்கள் கலைந்து போக (அல்லது சிதறி ஓட) ஆரம்பித்திருந்தனர்."
“சற்று துரத்தில் இருந்து சிலர் காவல் துறையினர் மீது கல் வீசினர். பின்னர் காவல் துறையினர் சிதறி ஓடிய மக்களை துரத்திச் சென்று கல்லாலும் தடியடியாலும் தொழிலாளர்களைத் தாக்க ஆரம்பித்திருந்தனர்."
"காவல் துறையினரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேறு வழி இல்லாததால் மக்கள் ஆற்றை நோக்கி ஓட ஆரம்பித்தனர். காவல்துறையினரும் விடாமல் துரத்த மக்கள் தண்ணீருக்குள் ஓடினர். அவர்களில் சிலர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்."
"மிதமுள்ளவர்களை காவல்துறை கவனித்துக் கொண்டது. ஆம்... சில காவலர்கள் ஆற்றின் அக்கரையை அடைந்து தப்பித்து மேலேறி வந்தவர்களையும் தாக்க ஆரம்பித்தனர்."
"அவ்வாறு துரத்தப்பட்டு காவலர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆற்றில் இறங்கிய போது நீரில் மூழ்கி இறந்தவர்கள் தான் அந்த இரண்டு வயது குழந்தையும் அவனுடைய தாயும்."
"அப்படியானால்..... அந்தக் குழந்தையின் உடலைக் கையில் ஏந்தி நிற்பது பெற்ற தாய் இல்லையா?"
"இல்லை. தாயும் மகனும் நீரில் மூழ்கி இறந்து விட்டனர். அந்தத் தந்தையின் நிலையை நினைத்துப் பார்."
"உரிமைக்காகவும், உழைப்பிற்கேற்ற ஊதியத்திற்காகவும் போராடியதற்காகக் கிடைத்த பலன் இது தான். சட்ட ஒழுங்கைக் காப்பது காவல்துறையினரின் கடமை. அதனால் தான் இது போன்று காவல் துறையினர் நடந்து கொள்ள நேரிட்டது என்றும் சிலர் சொல்லலாம். ஆனால் இரண்டு வயதுக் குழந்தையும் அவனுடைய தாயும் அப்படி என்ன சட்ட ஒழுங்கைப் பெரிதாகக் கெடுத்துவிடப் போகிறார்கள்?"
"அன்று மட்டும் 19 பேர் இறந்து விட்டனர். அதில் மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் உண்டு."
"அவர்கள் உயிரை இழந்து 10 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் ஒடுக்கப்பட்டவர்களின் நிலையோ தொழிலாளர் நிலையோ பெரிதாக முன்னேறி விடவில்லை."
கழுகு பேசி முடித்தது. குரலில் வலி இருந்தது.
லொடுக்கு மென்மையான குரலில் சொன்னான்,
"ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறப் போராடுபவர்களின் உணர்வுகளை எந்தத் தாக்குதலும் மழுங்கச் செய்து விட முடியாது. விரைவில் சமூக அளவிலும், பொருளாதார அளவிலும் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறி வெற்றி பெறுவார்கள் என்று நம்புவோம்"
"உணர்வு மற்றும் உரிமைப்போராட்டத்திற்காகத் தங்கள் இன்னுயிரயும் ஈந்த அவர்களுக்கு என்னுடைய தலை தாழ்ந்த வணக்கத்தை உரித்தாக்குகிறேன்" இந்த வாக்கியத்தை சொல்லும் போது ஏனோ லொடுக்குவின் கண்களும் கலங்கியிருந்தன.
Thursday, June 19, 2008
Subscribe to:
Posts (Atom)