Monday, March 31, 2008

Gandhi and Independence - Part 2

காந்தியும் விடுதலையும்: பகுதி – II

1942 ஆகஸ்ட் 9-ம் நாள் காந்தி போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே நசுக்கிவிட முடிவு செய்து காந்தியைக் கைது செய்தது அரசு.

அரசு, காந்தியோடு நிறுத்திக் கொள்ளாமல், அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்தது.

தலைவர்கள் கைது செய்யப்பட்டால் மக்களை ஒருங்கிணைத்துப் போராட ஆள் இருக்காது என்று எண்ணியது ப்ரிட்டிஷ் அரசு.

ஆனால் ....

நடந்தது வேறு.

"வெள்ளையனே வெளியேறு" என்று அழைக்கப்பட்ட அந்த இயக்கம் தன்னிச்சையாக மக்களால் நடத்தப்பட்டது. தலைவர்களின் கைதுக்கு மக்கள் பழி வாங்கினார்கள் என்றே சொல்லலாம்.

வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

அரசு அலுவலகங்களைக் கல்லெறிந்து தாக்குதல், ரயில் பாதைகளை அழித்தல், வெடிகுண்டு வீசுதல், கொள்ளையடித்தல் என்று மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியது.

நம்மூர் காவல்துறையினர் இதற்கெல்லாம் கலங்குபவர்களா என்ன?

மக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர், முடியவில்லை என்றால் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு; அதுவும் முடியவில்லையா, விமானத்தின் மூலம் சுடுதல் அன்று தங்களுடைய பயிற்சி முழுவதையும் பயன்படுத்தி ஒரு வழியாக வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் அதற்குள் கிட்டத்தட்ட 900 பேர் கொல்லப்பட்டனர், 60,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

"செய் அல்லது செத்துமடி" என்பதை முழக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் எதையும் செய்யாமலும் செத்துமடியாலும் ஒரு மிகப்பெரிய வன்முறை என்ற அளவில் முடிந்து போனது;

அல்லது காவல்துறையினரால் கடுமையாக அடக்கப்பட்டது.

இப்பவும் ப்ரிட்டன் அரசு எந்தவிதப் போராட்டத்தையும் சமாளிக்கத் தயாராக இருந்ததே தவிர இந்தியாவிற்கு விடுதலை தர வேண்டும் என்ற எண்ணமே இல்லை.

1943-ம் ஆண்டு ஃபிப்ரவரியில் காந்தி சிறையில் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார் (அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராகத்தான்).

அரசின் அடக்குமுறையால் நொந்து போயிருந்த மக்கள் மீண்டும் போராட்ட "மூடுக்கு" வந்து விட்டனர்.

ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்தன.

ஒரு வழியாக 1944ம் ஆண்டு காந்தியடிகள் மருத்துவநிலையைக் காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டார்.

அடுத்த சில மாதங்கள் எந்தப்போராட்டமும் குறிப்பிடத்தகுந்த அளவில் நடைபெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் மக்கள் எப்போதும் போல் போராடத்தயாராக இருந்தனர்.

அரசும் இந்தியத் தலைவர்களை சிம்லா மாநாட்டில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

இதே நேரத்தில் தான் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ரானுவம், ஜப்பானிய ரானுவத்துடன் சேர்ந்து இந்தியாவின் கிழக்கு எல்லைக்கு வந்து சேர்ந்தது.

இன்னும் கொஞ்ச நாளில் ஜப்பானுடன் சேர்ந்து இந்தியாவை ப்ரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை வந்த போது தான் உலக வரலாறு நிறைய மாற்றங்களைக் காணத்தொடங்கியது.

போர் அமெரிக்கக் கூட்டுப்படைக்கு ஆதரவான திசையில் திரும்ப ஆரம்பித்தது. சோவியத் யூனியன் ஜெர்மனியைத் திருப்பித் தாக்க ஆரம்பித்தது.

1945 ஜூலை வாக்கில் சோவியத் படை ஜெர்மனியை முற்றுகையிட்டது. தற்கால வரலாற்றின் பெரும் பிழையான நிகழ்வான "அணுகுண்டு தாக்குதல்" ஜப்பான் மீது அமெரிக்காவால் நடத்தப்பட்டது.

அதை நாம் "ஹிரோஷிமா நாகாசாகி படுகொலை" என்று அழைப்போம். அந்தப்படுகொலைக்குப் பின்னர் ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைந்தது. ஜெர்மனியை ரஷ்யப் படைகள் முற்றிலுமாகத் தோற்கடித்தன.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது (கோடிக்கணக்கான மக்களின் குருதியை உறிஞ்சிக்குடித்த பிறகு தான்).

ஜூன் 25 1945-ல் சிம்லா மாநாடு நடைபெற்றது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் ப்ரிட்டன் அரசு தன்னுடைய நிலையிலிருந்து ஓரளவு இறங்கி வந்திருந்தது.

அதுவும் முழு விடுதலை அல்ல.

வைசிராய் மற்றும் தலைமை ரானுவ தளபதி தவிர அனைவரும் இந்தியர்களால் ஆன ஒரு அரசு ஏற்படுத்தப் படும் என்ற அறிவிப்பு இருந்தது.

ஆனால் ஜின்னா இடைக்கால அரசில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம் லீக் உறுப்பினர்களாக மட்டும் இருக்க வேண்டும் அன்று அறிவிக்க சிம்லா மாநாடு தோல்வியில் முடிந்தது.

அவர் அவ்வாறு நினைக்கக் காரணம் இந்துத் தலைவர்கள் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்கள் சரி வர பிரதிநிதித்துவம் பெற முடியாது என்று நம்பியது தான்.

இதே நேரத்தில் ப்ரிட்டனில் அரசியல் மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்தியாவின் மீது அனுதாபம் கொண்ட க்ளெமென்ட் அட்லீ பிரதமரானார்.

அவர் இந்திய விடுதலையை எப்போதுமே ஆதரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1946-ல் பிரதமர் அட்லீ காபினட் குழு ஒன்றை ஏற்படுத்தினார். அக்குழுவின் நோக்கம் இந்தியாவில் கூடிய விரைவில் சுய ஆட்சி ஏற்பட வழி செய்வது ஆகும்.

இந்த அறிவிப்புக்கு முந்திய மாதம் வரை ப்ரிட்டிஷ் அரசுக்கு இந்தியாவிற்கு விடுதலை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை; அவர்கள் போரில் தோல்வியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது கூட விடுதலை அளிக்க மனம் வரவில்லை.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மக்களின் கடுமையான போராட்டத்தின் போது கூட விடுதலை எண்ணம் வரவில்லை.

இவ்வளவு ஏன் பம்பாயிலும் கராச்சியிலும் நடைபெற்ற ராயல் இந்திய கடற்படை (Royal Indian Navy) வீரர்களின் கலவரத்தின் போது கூட வராத எண்ணம் எந்த விதப் போராட்டமோ, கலவரமோ இல்லாத சூழ்நிலையில் திடீரென்று காபினெட் மிஷன் ஏன் அறிவிக்கப்பட்டது.

ஒரு வேளை இந்தியர்கள் விடுதலையைப் போராடிப் பெறவில்லை, மாறாக ப்ரிட்டனால் தரப்பட்டது என்ற எண்ணம் வரவேண்டும் என்பதற்காகவா என்று தெரியவில்லை.

காபினட் குழு தன்னுடைய அறிக்கையை மே மாதம் 16-ம் நாள் அறிவித்தது. ஒருங்கிணைந்த இந்தியா ஒன்றை இக்குழு பரிந்துரைத்தது. சுதேச மன்னர்களின் பகுதிகள் பின்னாளில் இணைந்து கொள்ளலாம். உடனடியாக ஒரு இடைக்கால அரசு ஏற்படுத்தி அரசியலமைப்பை இயற்றும் பணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது.

முஸ்லீம் லீக் எதிர்பார்த்த பாகிஸ்தான் தொடர்பான வாய்ப்பு எதுவும் இல்லாததால் ஜின்னா இடைக்கால அரசில் லீக் கலந்து கொள்ளாது என்று அறிவித்தார்.

அத்துடன் ஆகஸ்ட் 16ம் நாளை "Direct Action Day" ஆக அறிவித்தார். நேரடி செயலாக்க நாள் என்கிற " Direct Action Day " யின் உண்மையான பொருள் கல்கத்தாவில் தெரிந்தது. அன்று நடைபெற்ற முஸ்லிம் - இந்து கலவரத்தில் கிட்டத்தட்ட 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

எங்கும் மரண ஓலம், பிணங்கள், நெருப்பு, புகை.

நிலைமை மோசமாக ஆரம்பித்தது. இந்நிலையில் 1946 செப்டெம்பர் 2-ம் நாள் இடைக்கால அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்றது.

ஆம்... முழுக்க முழுக்க இந்தியர்களால் நடத்தப்படப் போகிற முதல் அரசு. (வைசிராயும், ரானுவ தளபதியும் ப்ரிட்டானியர்கள்).

ஆனால் ஜின்னா இந்த நாளை துயர நாளாக அறிவித்தார்


பின்னர் இடைக்கால அரசில் லீக் பங்கேற்றது. ஆனால் அரசியலமைப்பை இயற்றும் குழுவில் இடம் பெற மறுத்தது. ப்ரிட்டிஷ் அரசோ, லீகின் பங்களிப்பு இல்லாத அரசியலமைப்பை ஏற்க முடியாது என்று அறிவித்தது. மேலும் லீகின் பிடிவாத அனுகுமுறையால் இடைக்கால அரசு செயல்பட முடியாமல் ஆனது. (இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகை உணர்வும் வளர ஆரம்பித்தது)

இந்நிலையில் தான் இங்கிலாந்திலிருந்து அந்த அறிவிப்பு வந்தது. 1948 ஜூனுக்குள் இந்தியாவுக்கு விடுதலை அளிக்கப்படும் என்று அட்லீ அறிவித்தார். அந்த வேலையை முடிக்க சிறப்பு வைசிராயாக மவுன்ட்பேட்டன் அறிவிக்கப்பட்டார்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பொது மக்கள் முழு வேகத்தில் அரசை எதிர்த்துப் போராடிய போதெல்லாம் பணியாத அரசு, தங்களுடைய கடற்படையினரே கலகம் செய்த போது பணிந்துவிடாமல் அடக்கிய அரசு, இப்போது ஒற்றுமையில்லாமல் தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டிருக்கிற பொழுதில், இன்னும் சொல்லப் போனால் தங்களுடைய அரசுக்கு மக்களிடமிருந்து அவ்வளவு அபாயம் இல்லாத தருணத்தில் ஏன் ப்ரிட்டன் விடுதலை கொடுக்க முன்வர வேண்டும்?.


நம்முடைய விடுதலை நாம் பள்ளிக்கூடத்தில் படித்தது போல கடுமையான போராட்டத்தின் விளைவால் ப்ரிட்டன் நிர்வாகத்தால் தாக்குப்பிடிக்க முடியாமல் தரப்பட்டதல்ல என்றும் தோன்றியது

போரினால் ஏற்பட்ட பொருள் மற்றும் மனித இழப்பு காரணமாக இன்னும் வேறொரு நாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது லாபமிருக்காது என்று நினைத்து விடுதலை தந்தார்களா என்று தெரியவில்லை.

ஆனால் இதே நேரத்தில் இந்த உலகம் முழுதும் காலணி ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துகளும் மனநிலையும் தோன்றின என்பதை மறுக்க முடியாது.

ஆசியாவில் உள்ள அனைத்து காலணி நாடுகளும் 1945 - 1950 க்குள் விடுதலை அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அங்கெல்லாம் காந்தி போல ஒரு தலைவர் இதுவரை முன்னிறுத்தப்படவில்லை.

அனைத்து நாடுகளும் விடுதலை பெற்றதென்னவோ வலு மிகுந்த ப்ரிட்டிஷ் அரசிடமிருந்து தான். ஆனால் மற்ற நாடுகள் எல்லாம் காந்தி போன்ற பெரிய தலைவர்கள் இல்லாமல் விடுதலை பெற்றன.

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இவ்வாறு முடிவு செய்ய வேண்டியுள்ளது:

ப்ரிட்டனைப் பொறுத்தவரை எல்லா காலனி நாடுகளும் அடிமை நாடுகள் தான்.

எந்த நாட்டில் எவ்வளவு பெரிய போராட்டம் வெடித்தாலும் அதைச் சமாளிக்க அவர்களால் முடியும் (சமாளித்தும் இருக்கிறார்கள்),

1945க்குப் பிறகு உலகம் முழுதுமே எழுந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மனநிலையும், போருக்கு முன்பு வரை உலகின் தலைவனாக இருந்த ப்ரிட்டன் போருக்குப் பின்னால் அந்த இடத்தை அமெரிக்காவிடமும், ரஷ்யாவிடமும் இழந்ததோடு பொருளாதார ரீதியாக சந்தித்த இழப்புகளும் ப்ரிட்டனை தன்னுடைய நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தூண்டியிருக்கலாம்.

மிக மிக முக்கியமாக ஆசிய ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் மக்களுக்கு நாகரிகத்தைக் கற்றுக்கொடுப்பதும் அவர்களை ஆள்வதும் தங்களுடைய கடமை என்ற தங்களுடைய எண்ணம் முட்டாள்த்தனமானது என்று ப்ரிட்டானியர்கள் உணர்ந்திருக்கலாம்.

மொத்தத்தில் நம்முடைய தலைவர்கள் மக்களை ஒருங்கிணைத்துப் போராடினார்கள், மக்களும் துணிவுடன் அரசை எதிர்த்து நின்றார்காள், ஆனால் இவை விடுதலை பெறப் போதுமானதாக இல்லை.
எனவே நமக்கு மற்ற ஆசிய நாடுகளைப் போலவே விடுதலை தரப்பட்டது என்று முடிவு செயலாம்.

அதே நேரத்தில் போராடி விடுதலை பெறுவது என்றால் என்ன என்று அமெரிக்க விடுதலை வரலாற்றைப் படித்தால் புரியும். அங்கே அவர்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லை, அரசுக்கு எதிராக கோஷம் போடவில்லை, ஆயுதம் தூக்கினார்கள்; வெற்றி பெற்றார்கள். அது தான் உண்மையான விடுதலைப் போராட்ட வரலாறு.

நம்முடைய விடுதலை "கொடுக்கப்பட்டது" தானே தவிர "எடுக்கப்பட்டது இல்லை" என்கிற வலி தரக்கூடிய உண்மையை நாம் வேதனையுடன் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

உங்களில் சிலருக்கு இந்தப் பதிவில் சொல்லப்பட்ட கருத்துகளுடன் முரண்பாடு இருக்கலாம், தங்களுடைய மாறுபட்ட கருத்துகளை வரவேற்கிறேன்......

Wednesday, March 26, 2008

காந்தியும் விடுதலையும்: பகுதி – I (Gandhi and Independence Part I)

காந்தியும் விடுதலையும்: பகுதி – I

இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தது யார்?

இந்தக் கேள்வியை ஒரு சின்னக் குழந்தையிடம் கேட்டல் கூட "என்ன அங்க்கிள் இது கூட தெரியலியா? மகாத்மா காந்தி தான்" என்று சொல்லும்.

காந்தியடிகள் விடுதலைக்கு ஆற்றிய பங்கைப் பற்றி ஆராயும் முன் எனக்கு சில கேள்விகள் எழுந்தன.

கேள்வி 1: 1944 வரை இந்தியாவுக்கு விடுதலை அளிக்க முன் வராத ப்ரிட்டிஷ் அரசு 1945-க்குப் பின் திடீரென்று இந்திய விடுதலைக்கு ஒப்புக் கொண்டது ஏன்?

கேள்வி 2: 1947 ஆகஸ்ட் 15-ல் கல்கத்தாவில் நடந்த கலவரத்தை அடக்கச் சென்றதால் காந்தியடிகள் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கவில்லை என்பது ஒப்புக்கொள்ளக் கூடியது தான் என்றாலும் 1946 இடைநிலை அரசாங்கத்தில் காந்தியடிகள் ஏன் எந்தப் பொறுப்பையும் வகிக்கவில்லை? குறைந்த பட்சம் இடைநிலை அரசின் ஆலோசகராகவாவது இருந்திருக்கலாமே?

கேள்வி 3: இந்தியா விடுதலை பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட காலகட்டமான 1945 - 1947ம் ஆண்டுகளில் காந்தி ஏன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்?


காந்தி இந்திய விடுதலைக்கு ஆற்றிய பணிகளைப் பார்க்கும் முன்பு 1939ம் ஆண்டு முதல் இந்தியா விடுதலை பெறும் வரை நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி ஆராயலாம்.

1939 - இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. கிட்டத்தட்ட ஒட்டு மொத்த பூமிப் பந்தே இரண்டு பிரிவாகப் பிரிந்து கடுமையாக மோதிக் கொண்டது. நடுநிலை வகிக்கவோ, போரைத் தடுத்து நிறுத்தவோ எந்த நாடும் வல்லமை பெற்றதாக இல்லை; எந்த மனிதனுக்கும் அந்தத் திறன் இல்லை.

பூமிப் பந்துக்கு ரத்த தாகம் ஏற்பட்டுவிட்டதாகவே தோன்றியது. மனித ரத்தத்தைக் கூடுமான அளவுக்கு உறிஞ்சி பூமிப்பந்து குடிக்க காத்துக் கொண்டிருந்த காலம்.

VT (Viceroy’s Territory) என்று அழைக்கப்பட்ட இந்தியத் துணைக்கண்டத்திற்குள் வருவோம்.

அப்போது இந்தியா ஓரளவு அரசியல் தெளிவு பெற்று, ப்ரிட்டிஷ் அரசாட்சியின் கீழிருந்து விடுதலை பெறுவதே ஒரே நோக்கம் என்ற எண்ணம் மெதுவாக மக்களிடம் விதைக்கப்பட்டிருந்தது.

ப்ரிட்டிஷ் அரசாட்சிக்கு மக்களைத் திரட்டிப் போராடுவது மட்டும் தான் மிகச் சிறந்த வழி என்று அப்போதிருந்த தலைவர்கள் முடிவு செய்திருந்தனர். ஏனெனில், 1939க்கு சில ஆண்டுகள் முன்பு வரை புரட்சிகர தீவிரவாதிகள் அங்கொன்றும் இங்கொன்றும் சிலவாக ஆயுதத் தாக்குதல்களை அரசுக்கு எதிராக நடத்த ஆரம்பித்திருந்தனர். சில வெற்றியும் பெற்றன. சில தோல்வியிலும் முடிந்தன.

மக்களின் முழு ஆதரவையும் பெற்றிருந்த காந்தியடிகள், 1939 வரை இரண்டு மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி முடித்திருந்தார். இரண்டு போராட்டங்களும் சில காரணங்களால் தோல்வியில் முடிந்தன. (இங்கு தோல்வி என்பது இந்தியா விடுதலை பெறாததையே குறிக்கும்). அவற்றில் ஒன்று 1921ம் ஆண்டு கிட்டத்தட்ட இந்திய மக்கள் முழுதும் கலந்து கொண்ட "ஒத்துழையாமை இயக்கம்". இரண்டாவது 1932-ம் ஆண்டு நடந்த "சட்டமறுப்பு இயக்கம்".

1939ன் அரசியல் நிலையைப் பார்த்தோமானால் ஓரளவு நல்ல அறிகுறிகள் தெரிந்தன. 1935-ம் ஆண்டு இந்தியச் சட்டத்தின் படி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய மனப்போராட்டத்திற்குப் பின் 1937-ல் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது.

மக்கள் முதன்முறையாக இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டனர். இருப்பினும் அனைத்து முதன்மை வாய்ந்த அதிகாரம் அனைத்தும் ப்ரிட்டிஷாரின் கையில் தான் இருந்தது. காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. நிலப்பிரபுக்களின் அதிகாரம் குறைக்கப்பட்டது. மொத்தத்தில் தங்களால் இயன்றவரையில் காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களும், ஓரளவு நிரைவேற்றப்பட்டன.

ஒலி இருந்தால் எதிரொலியும் இருக்கும் அல்லவா?

காங்கிரஸ் ஆட்சி செய்த ஒரே ஆண்டில் ஊழல் மலிய ஆரம்பித்தது. இந்தியர்களிடமிருந்த இயல்பான ஒழுக்கமின்மையும், திடீரென்று கிடைத்த அதிகாரமும், ஊழல் அதிகமாக வளர ஊக்குவித்தது. அந்த நேரத்தில் தான் ஒட்டு மொத்த உலகையும் புரட்டிப் போட்ட இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தது.

ஹிட்லரின் நாஜிப்படை போலாந்தைத் தாக்கியது.

போர் ஆரம்பித்த சில நாட்களில் ஜெர்மனி நிறைய வெற்றிகளைப் பேறவே ப்ரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்த முடிவு செய்தது. ஆனால் அப்போது மத்திய அமைச்சரவையிலிருந்த காங்கிரஸிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியது ப்ரிட்டன். இந்தியத் தலைவர்கள் இதனால் ஆட்சியிலிருந்து விலக முடிவெடுத்தனர்.

காந்தி முதலில் ப்ரிட்டனுக்குத் தனது ஆதரவைத் தெரிவிதிருந்தார். இன்னும் சொல்லப்போனால் ப்ரிட்டனின் போர்முயற்சிக்கு நிபந்தனையில்லா ஆதரவு கொடுக்கவும் முடிவு செய்தார்.

ஆனால் சுபாஷ் போஸ் போன்ற தலைவர்களின் எண்ணம் வேறு மாதிரியாக இருந்தது. இது வரலாறு நமக்குக் கொடுத்த அரிய வாய்ப்பு. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி மீண்டும் ஒரு பெரிய மக்கள் புரட்சியில் ஈடுபட்டால் இந்திய விடுதலையை எளிதாகப் பெறலாம் என்று நம்பினார்.

காங்கிரஸ் தலைவர்கள் வைசிராயிடம் இந்தியா ப்ரிட்டனின் போர் முயற்சியில் முழு ஆதரவு அளிக்க வேண்டுமானால், போர் முடிந்தவுடன் இந்தியாவுக்கு முழு விடுதலை தரவேண்டும் அன்று தெரிவித்தனர். ப்ரிட்டன் அந்தக் கோரிக்கைக்கு ஒப்புக் கொள்ளவில்லை.

மாறாக ப்ரிட்டன், இந்தியப் படையைப் போரில் ஈடுபடுத்தியது.
1939-ம் ஆண்டு இறுதி வரையில் ப்ரிட்டனைப் பொறுத்தவரை போர் முடிந்தாலும் அவர்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டை தங்களிடமிருந்து இழக்க விரும்பவில்லை.
விடுதலை தொடர்பான காங்கிரஸின் கேள்விக்குப் பதிலாக, "முதலில் இஸ்லாமிய மக்க்ளுடனான பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள். பிறகு சுயாட்சியைப் பற்றிப் பார்த்துக் கொள்ளலாம்" என்ற பதில் வந்தது.

இன்னுமொருபடி மேலாக ப்ரிட்டன் தனது பெயர்பெற்ற பழைய டெக்னிக்கான "பிரித்தாளும் கொள்கை"யைப் பயன்படுத்த ஆரம்பித்தது. காங்கிரஸ் ஒரு இந்துக் கட்சி, என்று அறிவித்து இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு உளை வைக்க ஆரம்பித்தது.

அவ்வாறு ப்ரிட்டன் செய்யக் காரணம் மிக எளியது. காங்கிரஸை பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி தான் அது. ஆனால் ப்ரிட்டனின் இந்தப் போக்கு காந்தியடிகளை ஆத்திரமுறச் செய்தது. (காந்தியடிகள் இந்தப் போரில் ப்ரிட்டனுக்கு நிபந்தனையில்லா ஆதரவு வழங்கத தயாராக இருந்தார் என்பது நினைவிருக்கலாம்).

1940-ல் காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார். வினோபாவே தான் முதல் சத்தியாக்ரகி, இரண்டாவதாக நேரு. பேச்சுரிமை கூடத் தடை செய்யப்பட்டத்தால், ஒவ்வொரு சத்தியாகிரகியும் போரில் இந்தியாவின் செல்வமும், வீரர்களும் பயன்படுத்தப்படுவதை எதிர்த்துப் பேச வேண்டும். நிறைய பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் மக்களிடம் விடுதலை வேட்கை பரவ ஆரம்பித்திருந்தது.

மக்கள் ஒரு பெரிய போராட்டத்திற்குத் தயாராக இருந்தனர்.

1941ம் ஆண்டும் வந்தது.

போரில் நிறைய மாற்றாங்கள் ஏற்பட்டன.

போரில் மட்டுமல்ல; உலக வரலாற்றிலும் தான்.

ஜெர்மனி சோவியத் யூனியனைத் தாக்கியது. அதற்கு முன்பே பிரான்ஸ், ஹாலந்து, போலந்து, டென்மார்க் என்று வடக்கு ஐரோப்பா முழுவதும் ஜெர்மனியின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

ஜப்பான் சீனாவை முற்றுகையிட்டதோடில்லாமல், வரலாற்றின் ஒரு பெரும் பிழையயும் செய்தது.

அது வரை போரில் ஈடுபடாமல் இருந்த அமெரிக்காவின் பியர்ல் துறைமுகத்தைத் தாக்கியது. அதோடு நில்லாமல் தென்கிழக்கு ஆசியாவை முழுமாஇயாகக் கைப்பற்றிவிட்டு பர்மாவில் கால்பதித்தது ஜப்பான்.

War has been taken to India’s doorsteps...

இந்த நிமிடம் வரையில் ப்ரிட்டன் அரசுக்கு இந்தியாவுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளி கூட எழவில்லை என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்.

மிகமிக இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு இந்தியாவை இழக்க மனமில்லை. போரில் தங்களது நிலைமை மோசமாவதை உணர்ந்த அமெரிக்க அதிபரும், சீன அதிபரும் ப்ரிட்டன் பிரதமரிடம், இந்தியத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவை முழுமையாகப் போரில் ஈடுபட வலியுறுத்தினர்.

வேறு வழியின்றி வின்ஸ்டன் சர்ச்சில் க்ரிப்ஸ் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பினார். அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பு, இந்தியத் தலைவர்களுடன் பேசி இந்தியாவைப் போருக்கு சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் க்ரிப்ஸின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. க்ரிப்ஸ் அறிவித்த மூன்று சலுகைகள் இந்தியத் தலைவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

1. போர் முடிந்தபின்பு இந்தியாவுக்கு "டொமினியன் அந்தஸ்து" மட்டுமே வழங்கப்படும் (இந்தியத் தலைவர்கள் எதிர்பார்த்தது முழு விடுதலை)

2. இந்தியாவுக்கு தேவையான அரசியலமைப்பை உருவாக்க தேர்ந்தெடுகப் பட்ட பிரதிநிதிகள், மற்றும் சுதேச மன்னர்களால் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்படும். (காங்கிரஸைப் பொறுத்த வரையில், சுதேச சமஸ்தானங்களின் பிரதிநிதிகளும் அங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். மன்னர்களின் பிரதிநிதிகளை ஏற்றுக் கொள்ள முடியாது)

3. இந்தியாவில் சேர விரும்பாத பிரதேசங்காள் விலகிக்கொள்ளலாம். (இந்தியாவைப் பிளந்து பலவீனப்படுத்தும் முயற்சி அல்லது பாகிஸ்தானுக்கு அச்சாரம் ).

க்ரிப்ஸ் தூதுக்குழு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலும் ஒரு நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் அன்று கணித்த ப்ரிட்டிஷ் அரசு, அடக்குமுறையை ஏவ ஆரம்பித்தது.

1942 வரையிலும் கூட இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கும் எண்ணம் ப்ரிட்டனுக்கு இல்லை என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

1942-ம் ஆண்டு ஜூலை 14ம் நாள், காங்கிரஸ் ப்ரிட்டிஷ் அரசு முழுமையாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறியது.

அத்துடன் இந்தியர்களால் ஆன ஒரு இடைக்கால அரசு அமைக்கப்பட்டு இந்தியாவின் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இத்தீர்மானத்தை அரசு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் அரசை எதிர்த்து வன்முறையற்ற வழியில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அரசு எப்பவும் போல் தீர்மானத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. காங்கிரஸ் இயக்கத்தை அழித்து விடலாம் என்று கூட எண்ணியது.

பகுதி -2 ல் தொடரும்.....

Wednesday, March 12, 2008

இளவழகியின் பேட்டி

இளவழகியின் பேட்டி இன்று காலையில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். அலுவலகம் செல்லும் அவசரம் இருந்தாலும் பொறுமையாகப் பார்த்துவிட்டுப் போகவேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அண்மையில் ஃப்ரான்ஸில் நடந்த உலகக் கோப்பைக்கான கேரம் போட்டியில் வெற்றி பெற்று சேம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருந்தார்.

அரை மணி நேரம் இருக்கையிலேயே அமரவைத்துவிட்டது அந்தப் பேட்டி. மீடியா வெளிச்சத்தில் பேசவே தடுமாறும் ஒரு சராசரி நடுத்தரவர்க்கத் தமிழ்ப் பெண்ணைப் பிரதிபலித்தார் இளவழகி.

பேட்டியின் போது புன்னகைக்க வைத்த ஒரு இடம், "வட இந்திய ரசிகர்கள் பொதுவாக தென் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள், குறிப்பாக தமிழ்நாட்டு வீரர்களுக்கு துளி கூட சப்போர்ட் செய்ய மாட்டார்கள்" என்று முதல் போட்டி டேராடுனில் நடந்த போது ஏற்பட்ட அனுபவத்தை தான் இப்போது இந்தியாவின் சார்பாக வென்ற ஒரு சேம்பியன் என்பதையும் மறந்து வெகுளியாகக் கூறியது.

பெருமைப்பட வைத்த ஒரு விஷயம் "என் தந்தை ஒரு ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி, பெரும்பாலும் நன் அவருடன் தான் கேரம் பயிற்சி செய்வேன்" என்று கூறியது.

எத்தனை ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு உலக சேம்பியனுடன் கேரம் பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்?

வியக்க வைத்த ஒரு இடம், "என்னுடைய முதல் டோர்னமென்ட் நான் எட்டாவது படிக்கும் போது நடந்தது, அதில் நான் தோல்வியடைந்து எட்டாவது இடத்தைத் தான் பிடிக்க முடிந்தது. ஆனால் அந்தத் தோல்விக்காக நான் அழவில்லை, அத்துடன் எந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும் எனக்கு அழுகை வருவது இல்லை".
அவருடைய மன உறுதி உண்மையிலேயே வியக்க வைத்தது.

நெகிழ வைத்த ஒரு இடம், "வெற்றி பெற்றுத் தாயகம் திரும்பிய போது, எங்களை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த கூட்டத்தைப் பார்த்ததும் எனக்கு கண்கள் கலங்கி விட்டது". ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் அங்கீகாரம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வைத்தது. க்ரிக்கெட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்ற பொதுவான ஆதங்கம் இவருக்கும் இருந்தது.

ஆனால் அவருக்கு இருந்த வேறொரு ஆதங்கத்தைப் பற்றிச் சொன்ன போது சற்று உள்ளத்தை அதிரத் தான் வைத்தது. "நான் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவள், அது சேரி என்பதாலோ என்னவோ எங்களுக்கு ஸ்பான்சர் செய்யவே யாருமே முன்வருவதில்லை" என்று கூறிய போது சமூக அவலத்தின் உண்மை முகத்தில் அறைந்தது.

அவருக்கு ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கிடைத்த வேலைவாய்ப்பைப் பற்றி நன்றியுடனும், நெகிழ்ச்சியுடனும் கூறிய போது ஏனோ எனக்கு வருத்தம் தான் வந்தது.

நம் மண்ணில் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்வதை விட ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் அதிகம் உள்ளனர்.

இந்நாடு விளையாட்டுத்துறையில் முதலிடம் பெற வேண்டுமானால் அரசு நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஸ்பான்சர்களும் எல்லா விளையாட்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து திறமையை மட்டுமே மதித்து ஊக்குவிக்க வேண்டும்.

Monday, March 10, 2008

தீர்க்கப்படாத வழக்குகள்

இன்று நாடாளும் மன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் திரு. பரத்வாஜ், உச்சநீதிமன்றத்தில் 24 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருப்பதாக அறிவித்துள்ளார்.

அவற்றில் 15 வழக்குகள் 25 ஆண்டுகளுக்கு மேல் தீர்ப்பளிக்கப்படாமல் உள்ளன.
உச்சநிதிமன்றத்தின் நிலையே இப்படி என்றால், உயர்நிதிமன்றங்கள் மற்றும் அமர்வு நீதிமன்றங்களின் நிலையைப் பற்றி நாமே கணித்துக் கொள்ளலாம்.

அரசு தற்போது காலியாக இருக்கும் நீதியரசர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, மேலும் பல புதிய நிதிபதி பதவிகளை உருவாக்க வேண்டும்.

நடமாடும் நீதிமன்றங்கள், அதிவேக நீதிமன்றங்கள் போன்ற அருமையான முயற்சிகளைப் போல மேலும் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

ஒவ்வொரு வழக்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டும், நீதிபதிகளின் நியமனத்தில் தாமதத்தைக் குறைக்க வேண்டும், நீதிபதிகளும் தங்களுடைய கடமைக்குப் பொறுப்புள்ளவர்களாக ஆக்க வேண்டும் (Accountability).

சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றும் கொண்டுவரப்பட வேண்டும்.

"தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதி" என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருந்தால் தான் நாடு நாடாக இருக்கும். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு நீதித்துறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அரசின் தலையாய கடமை ஆகும். அதுவே தனிமனிதனுக்குச் சட்டத்தின் மேல் நம்பிக்கை பிறக்க வழிவகுக்கும்.

எல்லாளன்

கி.மு 210-ம் ஆண்டு அல்லது தி.மு 179.

தமிழகத்திலிருந்து ஈழம் நோக்கிச் சென்றான் ஒரு சோழ இளவரசன். அங்கு சென்று சில நாட்களில் அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த அசீலா என்ற மன்னனைத் தோற்கடித்தான். பின்பு அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு 44 ஆண்டுகள் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தான்.

அவனுடைய ஆட்சியின் கீழ் தமிழர்கள் இருந்தார்கள் என்றாலும் சிங்களர்கள் தான் மிக அதிகம். அற நெறி தவறாமல் ஆட்சி செய்தான். அவனுடைய ஆட்சியில் தமிழர்கள் மட்டுமல்லாது பௌத்த மதத்தைப் பின்பற்றிய சிங்களர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அங்கு இருந்த ஈழச் சிற்றரசன் ஒருவனின் மகன் தான் துட்டகைமனு. என்ன தான் மதச்சார்பில்லாமல் அனைவரும் விரும்பும் நல்ல ஆட்சியாக இருந்தாலும் ஆள்பவன் சிங்களவன் இல்லையே; தமிழன் ஆயிற்றே என்ற எண்ணம் அந்த இளவரசனிடம் இருந்தது. தவறில்லை தான். அந்த இளவரசன் துட்டகைமனு, தன்னுடைய தந்தையின் பேச்சையும் மீறி அந்தத் தமிழ் மன்னன் மீது போர் தொடுக்க முடிவு செய்தான்.

தன்னிடம் எஞ்சியிருந்த சிங்கள வீரர்களை வைத்துப் போர் தொடுத்தான். அவனுடைய படையினர் வெற்றியும் பெற்றனர். இறுதியில் அந்த வீரம்மிக்க இளம் துட்டகைமனு அந்தத் தமிழ் மன்னனுடன் அனுராதபுரத்தில் வைத்து நேருக்குநேர் போரிட்டான்.

கடுமையாக நடைபெற்ற அந்தப் போரின் இறுதியில் அந்தத் தமிழ் வீரன் இறந்து போனான். வீரனென்றாலும் நல்ல உள்ளம் படைத்த துட்டகைம்மனு இறந்த அந்த மாவீரனின் உடலை அரசனுக்கே உரிய முறையில் தகனம் செய்தான். அந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னமும் எழுப்பினான். அந்த இடத்தைக் கடந்து செல்பவர்கள் யாராயிருந்தாலும் இறங்கி தலை குனிந்து செல்ல வேண்டும் என்றும் ஆனையிட்டான் துட்டகைம்மனு. அந்த நினைவுச் சின்னம் இன்றும் இலங்கை அனுராதபுரத்தில் உள்ளது. வீரத்தை மதிக்கத் தெரிந்த அந்த வீர இளைஞன் துட்டகைம்மனுவுக்கு நமது வாழ்த்துகள்.

அந்தப் போரில் வீரமரணம் அடைந்த அந்தத் தமிழ் வீரனைப் பெற்றதற்காகத் தமிழ்த் தாய் நிச்சயம் பெருமை கொள்ளலாம். தமிழர்களாகிய நமக்கும் அந்த மன்னன் பெருமை சேர்த்துள்ளான்.

சரி. ஒரு தமிழ் இளவரசன் கடல் கடந்து சென்று ஈழ நாட்டை அடைந்து, அவர்களைப் போரில் வென்றான், நீதி நெறி வழுவாமல் ஆட்சி செய்தான் என்ற வரை எல்லாம் நல்ல செய்தி தான். ஆனால் ஒரு ஈழ இளவரசனிடம் நேருக்குநேர் நடந்த போரில் வெல்ல முடியாமல் தோல்வியுற்று இறந்து போவதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? அதற்காக நாம் ஏன் பெருமைப் பட வேண்டும் என்று ஒரு கேள்வி நம்மிடம் எழலாம்.

அதற்குப் பதில் இது தான்.

துட்டகைம்மனு என்ற சிங்கள அரச குடும்பத்து இளைஞனுடன் போரிட்டு இறந்து போவது தமிழ் இனத்தைப் பெருமைப்படுத்தும் சாதனை அல்ல தான். ஆனால் அந்தப் போரில் கலந்து கொண்டு நேருக்குநேராக அந்த இளம் இளவரசனை எதிர்த்துப் போரிட்டதே தமிழினத்திற்குப் பெருமை தான். ஏனென்றால் அந்த ஈழ இளவரசனுடன் வாளெடுத்து நேருக்குநேராகப் போரிட்டபோது அந்தத் தமிழ்த்தாய் பெற்ற தவப்புதல்வனின் வயது 75.

இப்போது சொல்லுங்கள், அந்த வீரனால் தமிழினத்திற்கே பெருமை தானே?

அந்தத் தமிழ் மன்னனின் பெயர் எல்லாளன்.

புரட்சிகரத் தீவிரவாதம் (Revoutionary Terrorism)

ஆக்கிரமிப்பு செய்திருக்கும் அரசாங்கத்தின் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதும், அரசுக்கு சில பொருளாதார, மனித இழப்புகளையும் ஏற்படுத்துவதைத் தவிர வேறு எதையும் சாதித்துக் காட்ட இயலாத ஒரு போராட்ட முறை தான் புரட்சிகர தீவிரவாதம் அல்லது தனிநபர் தாக்குதல்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் போதும் அம்மாதிரியான பல புரட்சிகர நிகழ்வுகள் நடந்தன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

அதற்கு முன் போராளிக்கும் தீவிரவாதிக்கும் உள்ள வேறுபாடுகளைச் சொல்லிவிடுகிறேன்.
இருவருமே ஆயுதம் ஏந்திப் போராடுபவர்கள் தான்.

1. அரசுக்கும் போராடுபவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து விட்டால், அன்று இரவிலிருந்து போராளிகள் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுவார்கள்.

2. உங்களுடைய ஆயுதப்போராட்டம் வெற்றி பெற்றால் நீங்கள் விடுதலைப் போராட்ட தியாகி, தோல்வியடைந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு தீவிரவாதி.

3. ஏதேனும் ஒரு வல்லரசு உங்களுக்கு ஆயுத உதவியும் பயிற்சியும் அளித்து வந்தால் (அதை வைத்து நீங்கள் எத்தனை பேரைக் கொன்றாலும்) உறுதியாக உலகின் பார்வைக்கு நீங்கள் ஒரு போராளி, அதே வல்லரசு உங்களை ஆதரிக்கவில்லையென்றால் நீங்கள் உங்கள் மக்களின் நியாயமான கோரிக்கைக்காக ஆயுதம் ஏந்தினாலும் (கற்பூரத்தைக் கொளுத்தி சத்தியம் செய்கிறேன்) நீங்கள் ஒரு தீவிரவாதி.

முதலில் பகத்சிங்கின் வீரச் செயலைப் பற்றிப் பார்ப்போம்.

1928-ம் ஆண்டுவாக்கில், ப்ரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் எப்படி நடைபெறுகிறது, ஆட்சி முறையில் எதுவும் மாற்றம் தேவைப்படுகிறதா என்று ஆராய ப்ரிட்டிஷ் அரசு சைமன் குழுவைப் பணித்தது.

அந்தக் குழுவை எதிர்க்க இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களுக்கு ஒரே ஒரு காரணம் போதுமனாதாயிருந்தது. "அந்தக் குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லை". சைமன் குழு இந்தியாவிற்கு வரவிருந்த போது கடுமையான எதிர்ப்புகள் இருந்தன.

பஞ்சாபில் நடந்த அப்படி ஒரு போராட்டத்தை முதுபெரும் தலைவர் "லாலா லஜபதி ராய்" தலைமை ஏற்று நடத்தினார். காவல்துறையினர் எப்போதும் போலத் தடியடி நடத்தினர். அந்தத் தாக்குதலில் காயம்பட்ட பெரியவர் லஜபதிராய் காலமானார்.

அப்போது வேர்விட்டு கிளைபரப்பியிருந்த HSRA (Hinduatan Socialist Republican Army) எனும் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் பகத்சிங். பெரியவரின் சாவுக்குப் பழிதீர்க்க முடிவு செய்தார். 17 டிசம்பர் 1928-ல் தடியடிக்குக் காரணமான சாண்டர்ஸ் என்ற காவல்துறை அலுவலரைக் கொலை செய்தனர் பகத்சிங்கும் அவரது நன்பர்களான ராஜ்குரு மற்றும் அசாத் ஆகியோர்.

பின்னர் 1929 ஏப்ரல் 8-ம் நாள் மத்திய அரசு அலுவலகத்தில் பகத்சிங்கும் பி.கே.தத் என்ற நன்பரும் வெடிகுண்டுகளை வீசினர். யாருக்கும் அபாயத்தை விளைவிக்காத அந்த குண்டுகளை வீசிவிட்டுத் தப்பித்து ஓடாமல் சரண் அடைந்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் "லாகூர் சதிவழக்கு" அன்று பெயர் பெற்ற வழக்கில் மரண தண்டனை அளிக்கப்பட்டனர். ஆனால் பொதுமக்கள் அனவரின் அனுதாபத்தையும், அன்பையும் அந்த வீர இளைஞர்கள் பெற்றனர். இந்நிகழ்வு ஓரளவு மக்களின் உணர்வுகளை எழச் செய்தது.
பகத்சிங் சொன்ன வரிகளுள் சிலவற்றை இங்கு சொல்வது அவரின் எண்ணத்தை நன்கு விளக்கும். புரட்சியைப் பற்றிய அவரது கருத்து :

“REVOLUTION does not necessary involve sanguinary strife, nor is there any place in it for individual vendetta. It is not the cult of the bomb and pistol. By REVOLUTION, we mean that the present order of things, which is based on manifest injustice, must change”.

ஒரு புரட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் என்று அவரது கருத்தையும் பார்ப்போம்:

“To be a REVOLUTIONARY, one requires immense moral strength, but also requires criticism and independent thinking. In the struggle for self – emancipation, humanity has to struggle against NARROW CONCEPTION OF RELIGION AS ALSO AGAINST THE BELIEF IN GOD”

மற்ற புரட்சிச் செயல்களை அடுத்த பதிவில் காண்போம்.....

Wednesday, March 5, 2008

அரச கட்டளை

கி.பி. 1169. திருவள்ளுவர் ஆண்டு 1200.

இன்றைய மதுரையைத் தலைமையாகக் கொண்ட பாண்டிய நாடு ஒரு பெரும் சிக்கலில் தவித்தது. குலசேகரபாண்டியனும் பராக்கிரமபாண்டியனும் பாண்டிய நாட்டின் அரசுரிமைக்காகக் கடுமையாக மோதிக் கொண்டனர். ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு தான் என்றாலும் இம்முறை பராக்கிரமபாண்டியன் ஒரு மிகப் பெரிய தவறைச் செய்தான்.

இலங்கை நாட்டு மன்னன் பராக்கிரமபாகு என்பவனின் உதவியை நாடினான். நமக்குள் உள்ள சண்டையை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும், வேறு நாட்டுக்காரனை தலையிட விடக் கூடாது என்ற எண்ணம் இல்லை. இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல இலங்கை மன்னன் பராக்கிரமபாகு தன்னுடைய தளபதி லங்காபுரனின் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பினான். அதற்குள் குலசேகரனின் படைகள் பராக்கிரமபாண்டியனை கொன்றது. இருப்பினும் லங்காபுரன் ராமேஸ்வரம் வழியாகத் தமிழகத்தினுள் நுழைந்து ஒவ்வொரு இடமாகக் கைப்பற்றினான்.

அவனுடைய எண்ணம் குலசேகரனிடமிருந்து மதுரையைக் கைப்பற்றி பராக்கிரமனின் மகன் வீரபாண்டியனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தான். லங்காபுரன் ஓரளவு வெற்றியும் பெற்றான். ஆனால் மொத்தம் இரண்டு தவறுகள் நிகழ்ந்தன.
ஒன்று: மதுரை உள்பட பாண்டியநாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றி ஊர்களை அழித்ததோடு நில்லாமல், சோழ நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றிய லங்காபுரன், போரில் தோல்வியுற்ற தமிழ் வீரர்களைக் கொலை செய்தான். ஊர்களை ஆழிக்க ஆரம்பித்தான்.

இரண்டு: குலசேகரன், சோழ மன்னனாகிய இரண்டாம் ராஜாதிராஜனின் உதவியை நாடினான்.

விளைவு இது தான்:

தமிழ் வீரர்களுக்கு நிகழ்ந்த கொடுமையும், சோழ மண்டலத்தைச் சுற்றியுள்ள சில ஊர்கள் அழிக்கப்பட்ட தகவலையும் அறிந்த சோழன் ராஜாதிராஜன் தன்னுடைய தளபதிக்கு இவ்வாறு கட்டளையிட்டான்.

"நம்முடைய தமிழ் வீரர்களையும் கொன்று, நம்முடைய ஊர்களையும் அழித்த அந்த இலங்கைப் படையை முற்றிலுமாக அழித்து, அந்த நாட்டுத் தளபதிகளின் தலையை எடுத்து மதுரை மாநகரில் ஆணியில் அடித்துத் தொங்க விட வேண்டும். அத்துடன் குலசேகரனை மதுரையில் ஆட்சிப் பொறுப்பில் அமர வைக்க வேண்டும்".

இதையறிந்த பராக்கிரமபாகு மேலும் படைகளை அனுப்பிக் கொண்டிருந்தான். ஆனால் என்ன செய்வது? பொதுவாகச் சோழ வீரர்கள் போர் என்றாலே ரத்த வெறியுடன் இருப்பார்கள். அப்படி இருக்கும் போது தன்னுடைய மன்னனே எதிரிகளின் தலையை அறுத்து ஆணியில் அடித்து வை என்று கூறி விட்டால் கேட்கவா வேண்டும்?

சோழ நாட்டு வீரத்தைப் பல முறை இலங்கை வீரர்கள் பார்த்தவர்கள் தான். ஆனால் இம்முறை தமிழ் மண்ணில் வைத்து நேரடியாகக் கண்டார்கள்.

சோழத்தளபதியின் நேர்த்தியான திட்டமிடும் அறிவையும், வெறி கொண்ட வேங்கையாய்த் தாக்கும் அவனுடைய வீரத்தையும் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சோழப்படைகள் ஒவ்வொரு பகுதியாக இலங்கை வீரர்களிடமிருந்து கைப்பற்றின. சோழத்தளபதி இலங்கைப் படையைத் தோற்கடிக்க விரும்பவில்லை. மாறாக அழிக்கவே விரும்பினான். அதைச் செய்தும் காட்டினான். இலங்கைத் தளபதிகளிடமிருந்து மதுரையைக் கைப்பற்றி குலசேகரனிடம் ஆட்சியையும் ஒப்படைத்தான்.
அத்துடன் நில்லாமல், பராக்கிரமபாகு மீண்டும் தன்னுடைய மன்னனுக்கும், குலசேகரனுக்கும் தொல்லை கொடுப்பான் என்று கருதிய அந்த வீரத் தளபதி கடல் கடந்து சென்று பராக்கிரமபாகுவின் கடற்கரையோர நகரங்களைக் கைப்பற்றி அழித்தான்.முழு வெற்றி கிடைத்து விட்டது. இனி அவன் சோழ நாடு திரும்பலாம் தானே?

இல்லை!!

இன்னும் ஒரு வேலை மிச்சம் இருந்தது. எந்தத் தளபதிகளின் ஆனைப்படி இலங்கை வீரர்கள் போரில் தோல்வியுற்ற தமிழ் வீரர்களைக் கொடூரமாகக் கொன்றார்களோ, அந்தத் தளபதிகள் அத்தனை பேரையும் கொன்றான் சோழத்தளபதி. பின்னர் அவர்களுடைய தலையை அறுத்து மதுரைமாநகரில் ஆணியில் அடித்த பிறகு தான் அவனது கடமையும் முடிந்தது; போர் வெறியும் தணிந்தது.

தன்னுடைய கட்டளைகள் மிக மிகத் துல்லியமாக நிறைவேறிய செய்தியை அறிந்த பின்பு தான் மன்னருக்கும் மகிழ்ச்சி. தன்னுடைய மன்னனின் ஆனையைத் தன்னுடைய வீரத்தினால் நிறைவேற்றிய அந்த மாவீரனின் இயற்பெயர் "பல்லவராயன்" என்கிற "திருச்சிற்றம்பலம் உடையான் பெருமாள் நம்பி" ஆகும்.

தமிழர்களின் மானத்தைக் காத்து, தமிழனின் வீரத்தை அனைவருக்கும் உணர்த்திய அந்தத் தளபதியான மாவீரன் பல்லவராயன் என்ற பெருமாள் நம்பியைத் தமிழர்களாகிய நாம் நினைத்து நினைத்துப் பெருமை கொள்வது தவறில்லை தானே?

வாழ்க மாவீரன் பெருமாள் நம்பியின் புகழ்!!
வாழ்க வீரர்களைப் பெற்ற தமிழ்த் திருநாடு...