Wednesday, March 26, 2008

காந்தியும் விடுதலையும்: பகுதி – I (Gandhi and Independence Part I)

காந்தியும் விடுதலையும்: பகுதி – I

இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தது யார்?

இந்தக் கேள்வியை ஒரு சின்னக் குழந்தையிடம் கேட்டல் கூட "என்ன அங்க்கிள் இது கூட தெரியலியா? மகாத்மா காந்தி தான்" என்று சொல்லும்.

காந்தியடிகள் விடுதலைக்கு ஆற்றிய பங்கைப் பற்றி ஆராயும் முன் எனக்கு சில கேள்விகள் எழுந்தன.

கேள்வி 1: 1944 வரை இந்தியாவுக்கு விடுதலை அளிக்க முன் வராத ப்ரிட்டிஷ் அரசு 1945-க்குப் பின் திடீரென்று இந்திய விடுதலைக்கு ஒப்புக் கொண்டது ஏன்?

கேள்வி 2: 1947 ஆகஸ்ட் 15-ல் கல்கத்தாவில் நடந்த கலவரத்தை அடக்கச் சென்றதால் காந்தியடிகள் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கவில்லை என்பது ஒப்புக்கொள்ளக் கூடியது தான் என்றாலும் 1946 இடைநிலை அரசாங்கத்தில் காந்தியடிகள் ஏன் எந்தப் பொறுப்பையும் வகிக்கவில்லை? குறைந்த பட்சம் இடைநிலை அரசின் ஆலோசகராகவாவது இருந்திருக்கலாமே?

கேள்வி 3: இந்தியா விடுதலை பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட காலகட்டமான 1945 - 1947ம் ஆண்டுகளில் காந்தி ஏன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்?


காந்தி இந்திய விடுதலைக்கு ஆற்றிய பணிகளைப் பார்க்கும் முன்பு 1939ம் ஆண்டு முதல் இந்தியா விடுதலை பெறும் வரை நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி ஆராயலாம்.

1939 - இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. கிட்டத்தட்ட ஒட்டு மொத்த பூமிப் பந்தே இரண்டு பிரிவாகப் பிரிந்து கடுமையாக மோதிக் கொண்டது. நடுநிலை வகிக்கவோ, போரைத் தடுத்து நிறுத்தவோ எந்த நாடும் வல்லமை பெற்றதாக இல்லை; எந்த மனிதனுக்கும் அந்தத் திறன் இல்லை.

பூமிப் பந்துக்கு ரத்த தாகம் ஏற்பட்டுவிட்டதாகவே தோன்றியது. மனித ரத்தத்தைக் கூடுமான அளவுக்கு உறிஞ்சி பூமிப்பந்து குடிக்க காத்துக் கொண்டிருந்த காலம்.

VT (Viceroy’s Territory) என்று அழைக்கப்பட்ட இந்தியத் துணைக்கண்டத்திற்குள் வருவோம்.

அப்போது இந்தியா ஓரளவு அரசியல் தெளிவு பெற்று, ப்ரிட்டிஷ் அரசாட்சியின் கீழிருந்து விடுதலை பெறுவதே ஒரே நோக்கம் என்ற எண்ணம் மெதுவாக மக்களிடம் விதைக்கப்பட்டிருந்தது.

ப்ரிட்டிஷ் அரசாட்சிக்கு மக்களைத் திரட்டிப் போராடுவது மட்டும் தான் மிகச் சிறந்த வழி என்று அப்போதிருந்த தலைவர்கள் முடிவு செய்திருந்தனர். ஏனெனில், 1939க்கு சில ஆண்டுகள் முன்பு வரை புரட்சிகர தீவிரவாதிகள் அங்கொன்றும் இங்கொன்றும் சிலவாக ஆயுதத் தாக்குதல்களை அரசுக்கு எதிராக நடத்த ஆரம்பித்திருந்தனர். சில வெற்றியும் பெற்றன. சில தோல்வியிலும் முடிந்தன.

மக்களின் முழு ஆதரவையும் பெற்றிருந்த காந்தியடிகள், 1939 வரை இரண்டு மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி முடித்திருந்தார். இரண்டு போராட்டங்களும் சில காரணங்களால் தோல்வியில் முடிந்தன. (இங்கு தோல்வி என்பது இந்தியா விடுதலை பெறாததையே குறிக்கும்). அவற்றில் ஒன்று 1921ம் ஆண்டு கிட்டத்தட்ட இந்திய மக்கள் முழுதும் கலந்து கொண்ட "ஒத்துழையாமை இயக்கம்". இரண்டாவது 1932-ம் ஆண்டு நடந்த "சட்டமறுப்பு இயக்கம்".

1939ன் அரசியல் நிலையைப் பார்த்தோமானால் ஓரளவு நல்ல அறிகுறிகள் தெரிந்தன. 1935-ம் ஆண்டு இந்தியச் சட்டத்தின் படி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய மனப்போராட்டத்திற்குப் பின் 1937-ல் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது.

மக்கள் முதன்முறையாக இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டனர். இருப்பினும் அனைத்து முதன்மை வாய்ந்த அதிகாரம் அனைத்தும் ப்ரிட்டிஷாரின் கையில் தான் இருந்தது. காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. நிலப்பிரபுக்களின் அதிகாரம் குறைக்கப்பட்டது. மொத்தத்தில் தங்களால் இயன்றவரையில் காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களும், ஓரளவு நிரைவேற்றப்பட்டன.

ஒலி இருந்தால் எதிரொலியும் இருக்கும் அல்லவா?

காங்கிரஸ் ஆட்சி செய்த ஒரே ஆண்டில் ஊழல் மலிய ஆரம்பித்தது. இந்தியர்களிடமிருந்த இயல்பான ஒழுக்கமின்மையும், திடீரென்று கிடைத்த அதிகாரமும், ஊழல் அதிகமாக வளர ஊக்குவித்தது. அந்த நேரத்தில் தான் ஒட்டு மொத்த உலகையும் புரட்டிப் போட்ட இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தது.

ஹிட்லரின் நாஜிப்படை போலாந்தைத் தாக்கியது.

போர் ஆரம்பித்த சில நாட்களில் ஜெர்மனி நிறைய வெற்றிகளைப் பேறவே ப்ரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்த முடிவு செய்தது. ஆனால் அப்போது மத்திய அமைச்சரவையிலிருந்த காங்கிரஸிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியது ப்ரிட்டன். இந்தியத் தலைவர்கள் இதனால் ஆட்சியிலிருந்து விலக முடிவெடுத்தனர்.

காந்தி முதலில் ப்ரிட்டனுக்குத் தனது ஆதரவைத் தெரிவிதிருந்தார். இன்னும் சொல்லப்போனால் ப்ரிட்டனின் போர்முயற்சிக்கு நிபந்தனையில்லா ஆதரவு கொடுக்கவும் முடிவு செய்தார்.

ஆனால் சுபாஷ் போஸ் போன்ற தலைவர்களின் எண்ணம் வேறு மாதிரியாக இருந்தது. இது வரலாறு நமக்குக் கொடுத்த அரிய வாய்ப்பு. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி மீண்டும் ஒரு பெரிய மக்கள் புரட்சியில் ஈடுபட்டால் இந்திய விடுதலையை எளிதாகப் பெறலாம் என்று நம்பினார்.

காங்கிரஸ் தலைவர்கள் வைசிராயிடம் இந்தியா ப்ரிட்டனின் போர் முயற்சியில் முழு ஆதரவு அளிக்க வேண்டுமானால், போர் முடிந்தவுடன் இந்தியாவுக்கு முழு விடுதலை தரவேண்டும் அன்று தெரிவித்தனர். ப்ரிட்டன் அந்தக் கோரிக்கைக்கு ஒப்புக் கொள்ளவில்லை.

மாறாக ப்ரிட்டன், இந்தியப் படையைப் போரில் ஈடுபடுத்தியது.
1939-ம் ஆண்டு இறுதி வரையில் ப்ரிட்டனைப் பொறுத்தவரை போர் முடிந்தாலும் அவர்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டை தங்களிடமிருந்து இழக்க விரும்பவில்லை.
விடுதலை தொடர்பான காங்கிரஸின் கேள்விக்குப் பதிலாக, "முதலில் இஸ்லாமிய மக்க்ளுடனான பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள். பிறகு சுயாட்சியைப் பற்றிப் பார்த்துக் கொள்ளலாம்" என்ற பதில் வந்தது.

இன்னுமொருபடி மேலாக ப்ரிட்டன் தனது பெயர்பெற்ற பழைய டெக்னிக்கான "பிரித்தாளும் கொள்கை"யைப் பயன்படுத்த ஆரம்பித்தது. காங்கிரஸ் ஒரு இந்துக் கட்சி, என்று அறிவித்து இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு உளை வைக்க ஆரம்பித்தது.

அவ்வாறு ப்ரிட்டன் செய்யக் காரணம் மிக எளியது. காங்கிரஸை பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி தான் அது. ஆனால் ப்ரிட்டனின் இந்தப் போக்கு காந்தியடிகளை ஆத்திரமுறச் செய்தது. (காந்தியடிகள் இந்தப் போரில் ப்ரிட்டனுக்கு நிபந்தனையில்லா ஆதரவு வழங்கத தயாராக இருந்தார் என்பது நினைவிருக்கலாம்).

1940-ல் காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார். வினோபாவே தான் முதல் சத்தியாக்ரகி, இரண்டாவதாக நேரு. பேச்சுரிமை கூடத் தடை செய்யப்பட்டத்தால், ஒவ்வொரு சத்தியாகிரகியும் போரில் இந்தியாவின் செல்வமும், வீரர்களும் பயன்படுத்தப்படுவதை எதிர்த்துப் பேச வேண்டும். நிறைய பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் மக்களிடம் விடுதலை வேட்கை பரவ ஆரம்பித்திருந்தது.

மக்கள் ஒரு பெரிய போராட்டத்திற்குத் தயாராக இருந்தனர்.

1941ம் ஆண்டும் வந்தது.

போரில் நிறைய மாற்றாங்கள் ஏற்பட்டன.

போரில் மட்டுமல்ல; உலக வரலாற்றிலும் தான்.

ஜெர்மனி சோவியத் யூனியனைத் தாக்கியது. அதற்கு முன்பே பிரான்ஸ், ஹாலந்து, போலந்து, டென்மார்க் என்று வடக்கு ஐரோப்பா முழுவதும் ஜெர்மனியின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

ஜப்பான் சீனாவை முற்றுகையிட்டதோடில்லாமல், வரலாற்றின் ஒரு பெரும் பிழையயும் செய்தது.

அது வரை போரில் ஈடுபடாமல் இருந்த அமெரிக்காவின் பியர்ல் துறைமுகத்தைத் தாக்கியது. அதோடு நில்லாமல் தென்கிழக்கு ஆசியாவை முழுமாஇயாகக் கைப்பற்றிவிட்டு பர்மாவில் கால்பதித்தது ஜப்பான்.

War has been taken to India’s doorsteps...

இந்த நிமிடம் வரையில் ப்ரிட்டன் அரசுக்கு இந்தியாவுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளி கூட எழவில்லை என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்.

மிகமிக இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு இந்தியாவை இழக்க மனமில்லை. போரில் தங்களது நிலைமை மோசமாவதை உணர்ந்த அமெரிக்க அதிபரும், சீன அதிபரும் ப்ரிட்டன் பிரதமரிடம், இந்தியத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவை முழுமையாகப் போரில் ஈடுபட வலியுறுத்தினர்.

வேறு வழியின்றி வின்ஸ்டன் சர்ச்சில் க்ரிப்ஸ் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பினார். அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பு, இந்தியத் தலைவர்களுடன் பேசி இந்தியாவைப் போருக்கு சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் க்ரிப்ஸின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. க்ரிப்ஸ் அறிவித்த மூன்று சலுகைகள் இந்தியத் தலைவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

1. போர் முடிந்தபின்பு இந்தியாவுக்கு "டொமினியன் அந்தஸ்து" மட்டுமே வழங்கப்படும் (இந்தியத் தலைவர்கள் எதிர்பார்த்தது முழு விடுதலை)

2. இந்தியாவுக்கு தேவையான அரசியலமைப்பை உருவாக்க தேர்ந்தெடுகப் பட்ட பிரதிநிதிகள், மற்றும் சுதேச மன்னர்களால் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்படும். (காங்கிரஸைப் பொறுத்த வரையில், சுதேச சமஸ்தானங்களின் பிரதிநிதிகளும் அங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். மன்னர்களின் பிரதிநிதிகளை ஏற்றுக் கொள்ள முடியாது)

3. இந்தியாவில் சேர விரும்பாத பிரதேசங்காள் விலகிக்கொள்ளலாம். (இந்தியாவைப் பிளந்து பலவீனப்படுத்தும் முயற்சி அல்லது பாகிஸ்தானுக்கு அச்சாரம் ).

க்ரிப்ஸ் தூதுக்குழு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலும் ஒரு நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் அன்று கணித்த ப்ரிட்டிஷ் அரசு, அடக்குமுறையை ஏவ ஆரம்பித்தது.

1942 வரையிலும் கூட இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கும் எண்ணம் ப்ரிட்டனுக்கு இல்லை என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

1942-ம் ஆண்டு ஜூலை 14ம் நாள், காங்கிரஸ் ப்ரிட்டிஷ் அரசு முழுமையாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறியது.

அத்துடன் இந்தியர்களால் ஆன ஒரு இடைக்கால அரசு அமைக்கப்பட்டு இந்தியாவின் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இத்தீர்மானத்தை அரசு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் அரசை எதிர்த்து வன்முறையற்ற வழியில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அரசு எப்பவும் போல் தீர்மானத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. காங்கிரஸ் இயக்கத்தை அழித்து விடலாம் என்று கூட எண்ணியது.

பகுதி -2 ல் தொடரும்.....

No comments: